‘அமைச்சராக விருப்பமில்லை; கேரளா, தமிழக மக்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன்’ - சுரேஷ் கோபி


திருச்சூர்: மத்திய அமைச்சராக விரும்பவில்லை என்றும், கேரளா, தமிழக மக்களின் நலன்களுக்காக பணியாற்ற விரும்புவதாகவும் நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாநிலத்தில் பாஜகவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார் சுரேஷ் கோபி. வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் எந்தத் துறைக்கு அமைச்சராக விருப்பம் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த திருச்சூர் எம்.பி., "தயவுசெய்து என்னை ஒரு கட்டத்துக்குள் அடைத்து விடாதீர்கள். ஒரு மக்களவை உறுப்பினர் என்ற முறையில் பல்வேறு அமைச்சகங்கள் சார்ந்த பணிகளை என்னால் செய்ய முடியும். நான் அமைச்சராக ஆக விரும்பவில்லை. அங்கே பல புதிய வேலைகளுக்கான தளங்கள் இருக்கலாம்.

நான் விரும்புவது எல்லாம் கேரள மக்களின் நலனுக்காக உறுதியான திட்டங்களுடன் நான் செல்லும் போது, அமைச்சர்கள் அதனை அக்கறையுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே. நான் திருச்சூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருப்பதால் என்னுடைய பணி இந்தத் தொகுதியுடன் மட்டும் நின்று விடாது. நான் கேரளாவுக்கும், அண்டைமாநிலமான தமிழகத்துக்கும் சேர்ந்தே பணியாற்ற விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

அதேபோல் திருச்சூர் பூரம் திருவிழா குறித்து பேசிய சுரேஷ் கோபி, "சிறப்பு வாய்ந்த அந்த திருவிழாவை எப்படி நடத்துவது என்பது குறித்த புதிய நடைமுறைத் திட்டம் உள்ளது என்று தெரிவித்தார். இந்தாண்டு பூரம் திருவிழாவில் போலீஸார் அதிக கட்டுப்பாடுகள் விதித்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தநிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் சுரேஷ் கோபி வெற்றி பெற்றிருப்பது மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட்களின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) ஆகியவைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு முன்னணிகளும் திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றி பெற்று, மாநிலத்தில் பாஜக கால்பதிக்கும் என முன்னறிவித்த அனைத்து கருத்துக்கணிப்புகளை கடைசி நிமிடம் வரை நிராகரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x