பாஜக+ Vs இண்டியா ‘டஃப்’ முதல் ஒடிசா, ஆந்திரா ‘ஷாக்’ வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜக முன்னிலை: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 298 இடங்களிலும், இண்டியா கூட்டணி 225 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 20 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் நேரடி போட்டி நிலவுகிறது.

> வாராணசியில் பிரதமர் மோடி: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் சூழலில் உத்திரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முதல் மூன்று சுற்றுகளில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைவிட 5,000 வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவை சந்தித்தார். பின்னர் 4-வது சுற்றில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றார்.

> தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ராகுல் காந்தி: இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். வயநாட்டில் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றார். ரேபரேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கைவிட 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

> தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 38 இடங்களிலும், பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி தலா ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேபோல் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தருமபுரியில் முன்னிலை வகிக்கிறார். பாஜக தனித்து எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை. அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மிகவும் பின்தங்கியுள்ளார்.

> கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவு: கோவை மக்களவை தொகுதியில் முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 27,269 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் அண்ணாமலையை பின்னுக்குத் தள்ளியுள்ளார். அவர், 19,869 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 12,871 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் கலாமணி ஜெகநாதன் 3,678 வாக்குகளும் பெற்றுள்ளனர். முதல் சுற்றில் மொத்தம் 65,513 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் நோட்டாவுக்கு 501 வாக்குகள் பதிவாகி உள்ளன.

> மக்களவைத் தேர்தலில் முந்தும் திமுக வேட்பாளர்கள்: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தில் திமுக வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்லை பெற்று வருகின்றனர். வட சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 27 ஆயிரத்து 586 வாக்குகள் பெற்று 17 ஆயிரத்து 987 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். தென் சென்னை தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழச்சி தங்கபாண்டியன் 27,258 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

> ஆந்திராவில் உறுதியாகும் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி: தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தின் அரியணையை உறுதி செய்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி. 175 சட்டப்பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 154 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேநேரம், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது.

> ஒடிசாவில் பாஜக தொடர்ந்து முன்னிலை; பிஜேடி பின்னடைவு: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரம், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கந்த்பன்ஜி தொகுதியில் 521 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 73 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 18 மக்களவை தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதேநேரம் பிஜேடி 50 சட்டப்பேரவை தொகுதியிலும், இரண்டு மக்களவை தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 13 சட்டப்பேரவை தொகுதிகளிலும், ஒரு மக்களவை தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

> பாஜக+ Vs இண்டியா இடையே கடும் மோதல்: மக்களவைத் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகி வரும் நிலையில் பாஜக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணிகளுக்கு இடையே சரிநிகர் மோதல் உருவாகி வருகிறது. இதனால், கடந்த ஜூன் 1-ல் வெளியான தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகள் பொய்யாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அன்று மாலையில் பல தனியார் நிறுவனங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. இவை அனைத்திலும் பாஜக தலைமையிலான என்டிஏவிற்கு 300 முதல் 400 தொகுதிகள் கிடைக்கும் எனக் கணித்திருந்தன. இந்நிலையில், இன்று காலை முதல் வெளியாகி வரும் மக்களவை தேர்தலின் முடிவுகள், தேர்தலுக்கு பிந்தையக் கணிப்புகளை பொய்யாக்கி வருகின்றன.

காலை 11.00 மணி வரை வெளியான தேர்தல் முன்னணியில் ஆளும் என்டிஏவிற்கு 291, இண்டியாவுக்கு 225 தொகுதிகளில் முன்னணி கிடைத்துள்ளது. இதர கட்சிகளுக்கு 27 தொகுதிகளில் முன்னணி நிலை உள்ளது.

> அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் பிரதமர் மோடி பின்னடைவு என்று தகவல் வெளியானதும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, “தற்போதைய பிரதமர் முன்னாள் பிரதமர் ஆகப் போகிறார் என்பதை இந்தப் போக்குகள் காட்டுகின்றன” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி பின்னடைவை சந்தித்ததை சுட்டிக்காட்டும் விதமாக இந்த கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.

> பங்குச்சந்தையில் மோசடி: பாஜக மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு: தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தாங்கள் வெற்றிபெறப் போவதாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் பாஜகவினர் பங்குச் சந்தையில் பல ஆயிரம் கோடிகளை மோசடியாக சம்பாதித்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

x