புதுடெல்லி: நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு (என்டிஏ) அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கூட்டணித் தலைமைக் கட்சியான பாஜக 33 தொகுதிகளில் முன்னலை வகிக்கிறது. அதனைப் பின்னுக்குள் தள்ளிவிட்டு சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 மற்றும் பிஎஸ்பி ஒரு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி புரிகிறது. இச்சூழலில், மக்களவை தேர்தலின் முன்னணி நிலவரம் பாஜக தலைமையிலான என்டிஏவிற்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. இங்கு என்டிஏ 37, இண்டியா கூட்டணி 41 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றன.
உ.பி.யில் இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சியான சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னணி பெற்றுள்ளன. என்டிஏவின் பாஜக 34, அப்னா தளம் 1-ல் முன்னணி வகிக்கின்றன. முக்கியத் தொகுதிகளில், வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னணி வகிக்கிறார். அப்னா தளம் தலைவரான மத்திய அமைச்சர் பட்டேல், மிர்சாபூரில் முன்னணி வகிக்கித்து வருகிறார்.
மீரட்டில் பாஜக வேட்பாளரான அருண் கோவிலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கு 2009, 2014, 2019-ல் எம்.பியாக இருந்த ராஜேந்தர் அகர்வாலுக்கு பாஜகவில் இந்தமுறை வாய்ப்பளிக்கப்படவில்லை. மீரட்டில் சமாஜ்வாதியின் சுனிதா வர்மா முன்னேறிவருகிறார்.
இண்டியா கூட்டணி சார்பில் முக்கிய தொகுதிகளில் ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் முன்னணி வகிக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் வேட்பாளரான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கன்னோஜிலும், அவரது மனைவியாக டிம்பிள் சிங் யாதவ் மெயின்புரியிலும் முன்னணி வகிக்கின்றனர்.
பாஜக எம்.பி.,யான முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி சுல்தான்பூரில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் ராம்புவால் நிஷாத் முன்னிலை வகிக்கிறார்.
மேலும், உ.பி.யின் பல முக்கிய தொகுதிகளில் என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மாலை வரையில் வெளியாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளின் முடிவுகள் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை பொய்யாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.