புவனேஸ்வர்: ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகட்ட நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
ஒடிசா மாநிலத்தில் 2024 மக்களவைத் தேர்தலோடு, 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 63.46 சதவீத வாக்குகள் பதிவானது. மாநிலத்தில் இந்த முறை பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் பிஜேடியை அகற்ற வேண்டும் என பாஜக தீவிரம் காட்டியதால் ஒடிசா தேர்தல் களம் நாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம் எப்படி?: வாக்கு எண்ணிக்கையின் 9 மணி நிலவரப்படி பாஜக 17 சட்டப்பேரவை தொகுதிகளிலும், ஒரு மக்களவை தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதேநேரம் பிஜேடி 10 சட்டப்பேரவை தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 1 சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.
முந்தைய 2019-ல் நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 147 இடங்களில் 112 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சி அமைத்தது. பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆறாவது முறையாக அவர் ஆட்சியைப் பிடிப்பார். சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறலாம்.
தற்போதைய கருத்துக்கணிப்பின்படி, பாஜக அதிக தொகுதிகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு 62 முதல் 80 இடங்கள் வரை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி 62 முதல் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 5 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இதனால், ஒடிசாவில் அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதில் பாஜக மற்றும் பிஜேடி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஒடிசாவின் 21 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.