மரங்களை வெட்டக் கூடாது: இந்திய இஸ்லாமிய மையம் அறிவுரை


கோப்புப் படம்

லக்னோ: இந்திய இஸ்லாமிய மையத்தின் (ஐசிஐ) தலைவர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹாலி கூறியுள்ளதாவது: புவி வெப்பமடைவதை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மரங்களை வெட்டவோ, பயிர்களை எரிக்கவோ வேண்டாம் என கூறி ஃபத்வா (இஸ்லாமிய சட்டத்தின்படி ஆணை) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புனித குரானில் கூறியுள்ளபடி பசுமையை பாதுகாப்பதும், தண்ணீர் வீணாவதை தடுத்து அதனை சேமிப்பதும் முஸ்லிம்களின் முக்கிய மதக் கடமையாகும். எனவே ஒவ்வொரு முஸ்லிமும் பசுமை மரங்கள் வெட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அத்துடன், பயிர்களுக்கு தீ வைப்பதையும் தடுக்க வேண்டும்.

மனிதர்கள், விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை பயக்கும் மரக்கன்றுகளை நடுபவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் இருக்கும். எனவே, குளங்கள், கால்வாய்கள், ஆறுகள் மற்றும் கடல் மாசுபடாமல் பாதுகாக்க நேர்மையான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் மரங்கள், பயிர்களை எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. போரின்போது கூட மரங்கள், தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளை எரிக்கவோ, சேதப்படுத்தவோ கூடாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. இவ்வாறு மவுலானா காலித் கூறியுள்ளார்.

x