நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை நான்கு கட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில், 45.1 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என்றும் 66.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும் இந்தியதேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் 381 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது. அந்தத் தொகுதிகளில் உள்ள மொத்த வாக்களர்களில் 45.1 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது 66.95 சதவீதம் ஆகும்.
5-ம் கட்ட வாக்குப் பதிவு மே 20-ம் தேதி , 6-ம் கட்ட வாக்குப் பதிவு மே 25-ம் தேதி, 7-ம் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளன.
அடுத்து நடைபெற இருக்கும் கட்டங்களில், வாக்குப் பதிவு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமை தேர்தல் அதிகாரிகளுக்குவழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், “வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்க வேண்டும். அதிக வாக்குப் பதிவு என்பது இந்திய வாக்காளர்கள் உலகுக்கு அளிக்கும் செய்தி ஆகும்.வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள், பிரபலங்கள் பங்கேற்பது வாக்குப் பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்” என்றார்.