இண்டியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்: டெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு கார்கே தகவல்


புதுடெல்லி: இண்டியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 7-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வரும் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் முடிவுக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் எதிர்க்கட்சி கள் அடங்கிய இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் சோனியா, ராகுல், பிரியங்கா, கே.சி.வேணுகோபால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் கல்பனா சோரன், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவேசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர் அனில் தேசாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேற்கு வங்கத்தில் இறுதிகட்ட தேர்தல் நடைபெறுவதாலும் (நேற்று) ரீமல் புயல் நிவாரணப்பணிகள் நடைபெறுவதாலும் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மம்தா ஏற்கெனவே தகவல் தெரிவித்து விட்டார். மக்கள் ஜனநாயக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கவில்லை.

இக்கூட்டத்துக்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, "இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினோம். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம்.

குறிப்பாக வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசித்தோம். இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு தலைவர்கள் வழங்க வேண்டிய ஆலோசனைகளையும் வழங்கினோம்.

வாக்குகள் முழுமையாக எண்ணப்படும் வரை மையத்திலிருந்து வெளியேறக் கூடாது என தொண்டர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.

இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இது ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட அதிகம். வாக்குப் பதிவு தொடர்பாக, பொதுமக்கள் தங்களிடம் அளித்த தகவலை கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், இந்த எண்ணிக்கையை உறுதி செய்துள்ளோம். மத்திய அரசின் கணிப்பு ஒன்று உள்ளது. ஆட்சியாளர்களின் ஊடக நண்பர்களும் கணிப்பை மிகைப்படுத்துகின்றனர். எனவே நாங்கள் உண்மை நிலவரத்தை உங்களுக்கு சொல்கிறோம்" என்றார்.

டிவி விவாதத்தில் பங்கேற்போம்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தொடர்பான டி.வி. விவாதங்களில் பங்கேற்பதில்லை என காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதை பாஜக கடுமையாக சாடியிருந்தது.

இந்நிலையில், இண்டியா கூட்டணி கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறும்போது, "தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தொடர்பான டி.வி. விவாதங்களில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அப்போது, இதில் பாஜகவின் சதி இருப்பதை அம்பலப்படுத்த என்றார். உள்ளோம்"

இக்கூட்டம் தொடர்பான வீடியோவை மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், “வாக்கு எண்ணிக்கை நாளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூடி ஆலோசனை நடத்தினோம். போராட்டம் இன்னும் முடியவில்லை.

அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. நாட்டு மக்கள் ஆதரவுடன், மக்களவைத் தேர்தலை முழு வலிமையுடன் எதிர்கொண்டோம். இதில் நேர்மறையான முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

x