மீண்டும் பாஜக ஆட்சிக்கு வாய்ப்பு: கருத்துக் கணிப்புகள் ஹைலைட்ஸ் | டாப் 10 விரைவுச் செய்திகள்


> தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்: இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இண்டியா கூட்டணி 130+ இடங்களிலும், இதரக் கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி பெற சாத்தியக் கூறு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபிபி - சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 353-383
இண்டியா கூட்டணி: 152-182
மற்றவை: 4-12
ரிபப்ளிக் டிவி - Matrize கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 353 - 368
இண்டியா கூட்டணி: 118 - 133
மற்றவை: 43 - 48
ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 362 - 392
இண்டியா கூட்டணி: 141 - 161
மற்றவை: 10 - 20
இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி - 371
இண்டியா கூட்டணி - 125
மற்றவை - 47
நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி - 342-378
இண்டியா கூட்டணி - 153-169
மற்றவை - 21-23
டைனிக் பாஸ்கர் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 281 - 350
இண்டியா கூட்டணி: 145 - 201
மற்றவை: 33 - 49
இண்டியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 371-401
இண்டியா கூட்டணி: 109-139
மற்றவை: 28-38
என்டிடிவி-ஜான் கி பாத் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 365
இண்டியா கூட்டணி: 142
மற்றவை: 36

தமிழகத்தில் திமுக கூட்டணி 35+ இடங்களிலும், பாஜக கூட்டணி குறைந்தது 1 இடத்திலும், அதிமுக வாஷ் அவுட் கூட ஆகலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன் விவரம்:
சிஎன்என் - நியூஸ் 18:
திமுக கூட்டணி: 36 - 39
அதிமுக கூட்டணி: 0-2
பாஜக கூட்டணி 1-3
இண்டியா டுடே:
திமுக கூட்டணி 26 -30
அதிமுக கூட்டணி 0 -2
பாஜக கூட்டணி 1 - 3
ஜன் கி பாத்:
திமுக கூட்டணி 34 - 38
அதிமுக கூட்டணி - 1
பாஜக 5+
ஏபிபி சி வோட்டர்:
திமுக கூட்டணி 37 - 39
அதிமுக கூட்டணி - 0
பாஜக கூட்டணி - 2
இந்தியா டுடே - ஆக்சிஸ்:
திமுக கூட்டணி - 33+
பாஜக கூட்டணி 2 முதல் 4

7 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது அன்றைய மாலைக்குள் தெரிந்துவிடும். இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவற்றிலும் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.

> மக்களவைத் தேர்தல் 2024 நிறைவு: கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இறுதி மற்றும் 7-ம் கட்ட மக்களவை தேர்தல் சனிக்கிழமை நடந்தது முடிந்தது. உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9,பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, சண்டிகர் 1 என மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கத்தின் சில பகுதிகளைத் தவிர பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடந்து முடிந்தது.

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சூறையாடினர். அதோடு இரண்டு விவிபாட் இயந்திரங்கள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

> டெல்லியில் இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் நிலையில், வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பாக இண்டியா கூட்டணி கட்சிகள் தங்களின் முக்கியமான வியூகக் கூட்டத்தை டெல்லியில் நடத்தினர். இந்தக் கூட்டம் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சனிக்கிழமை நடந்தது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்கே, "இந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. நாங்கள் ஒன்றாக உள்ளோம். எங்களைப் பிரிக்கும் வேலையைச் செய்யாதீர்கள். இண்டியா கூட்டணி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பங்கேற்க முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்தார்.

> வெற்றியின் முகட்டில் இண்டியா கூட்டணி: ஸ்டாலின்: “பாஜக.,வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இண்டியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இண்டியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

> 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி!: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வந்த தியானத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார். தியானம் முடிந்து திருவள்ளுவர் சிலைக்கு தனி படகில் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தியானத்தை முடித்த பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.

> மின் தடை - மின்வாரியம் விளக்கம்: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகள் காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

> 14 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

> “ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர்!”: ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனை இஸ்ரேல் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

> புனே கார் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தாய் கைது: புனேவில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறுவனின் தாயார் ஷிவானி அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, ரத்தப் பரிசோதனைக்கு சிறுவனின் ரத்த மாதிரிக்குப் பதிலாக தனது ரத்த மாதிரியை ஷிவானி கொடுத்திருந்தது அம்பலமானது. இதன் பேரில் ஷிவானி மீது போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

> சல்மான் கானை கொல்ல சதி செய்த 4 பேர் கைது: பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய நோட்டமிட்டு வந்ததாக லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நவி மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த மாதம் சல்மான் கானின் வீட்டுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

x