ஷரியா முஸ்லிம் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: யோகி ஆதித்யநாத்


இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. முஸ்லிம் லீக்கின்ஆவணம் போன்றே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளது. நமதுநாட்டில் ஷரியா முஸ்லிம் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெறும் தலிபான்கள் ஆட்சி போன்று இங்கு கொண்டு வர காங்கிரஸ் முயல்கிறது.

இது நடந்தால், நமது நாட்டில் பெண் குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்குச் செல்ல முடியாது. பெண்கள் புர்கா அணிந்துகொண்டு வீட்டிலேயே முடங்கி இருக்கவேண்டிய நிலை வரலாம். அதேபோல் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் அல்லாதோர் கட்டவேண்டும் என்று கொண்டு வரப்பட்ட ஜிஸியா வரியையும் காங்கிரஸ் கொண்டு வரும்.

நமது நாட்டில் டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த அரசமைப்புச் சட்டப்படிதான் ஆட்சி நடக்கவேண்டும். ஷரியா சட்டப்படி அல்ல. இம்முறை 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். மீண்டும் ஒருமுறை மோடி சர்க்கார் மலரும்.

பாஜகவை எதிர்க்கும் இண்டியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. கூட்டணிக்குள்ளேயே பல்வேறுபிரிவுகள் உள்ளன. அவர்களால் கூட்டணியையே ஒருங்கிணைக்க முடியாத நிலையில், நாட்டை எப்படி ஒருங்கிணைப்பர்?

இமாச்சலில் போட்டியிடும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி அமைச்சரவையில் உள்ளநவரத்தினங்களில் ஒருவராக அனுராக் சிங் தாக்குர்உள்ளார். அவர் இமாச்சல் மண்ணின் மைந்தன். மத்திய அமைச்சராக இருந்து ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் அவர் பணியாற்றி வருகிறார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்தி பெருமை சேர்த்துள்ளார்.

வரும் 2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை பொதுமக்கள் ஆதரிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

x