பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்துவிட்டார் நரேந்திர மோடி: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு


பஞ்சாப் உட்பட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் 7-வது மற்றும் இறுதிகட்ட மக்களவைத் தேர்தல் நாளை ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், பஞ்சாப் வாக்காளர்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் தலைவர்களின் உரைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இதில் பிரதமர் மோடி ஒரு சமுதாயத்தினரை மிகவும் வெறுக்கத்தக்க வகையில் பேசி வருகிறார். அவரது பேச்சுகள் மக்களை பிளவுபடுத்தக்கூடிய வகையில் உள்ளன.

பிரதமர் பதவி மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் தரம் தாழ்ந்து பேசிய முதல் பிரதமர் மோடிதான். இதற்கு முன்பு எந்தப் பிரதமரும் இதுபோன்று எதிர்க்கட்சிகள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது வெறுப்பை உமிழ்ந்தது இல்லை. என்னைப் பற்றியும் அவர் சில தவறான கருத்துகளை தெரிவித்தார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திடமிருந்து பிரித்துப் பார்த்ததே இல்லை.

இது பாஜக வினருக்கே உரித்தான தனி குணாதிசயம் ஆகும். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டுமே நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும். ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x