ஒடிசா மக்கள், ஜெகந்நாதரை இழிவுபடுத்திவிட்டது பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


ஒடிசாவின் புரி மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘பகவான் ஜெகந்நாதர், பிரதமர் மோடியின் பக்தர்’’ என கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் ஒடிசாவில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பகவான் ஜெகந்நாதர், பிரதமர் மோடியின் பக்தர் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியதன் மூலம், ஒடிசா மக்கள், ஜெகந்நாதரை பாஜக இழிவுபடுத்திவிட்டது.

ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் அழிப்பதற்காக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. நமது அரசியல் சாசனத்தை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. பாஜக தனது அனைத்து சக்திகளை பயன்படுத்தினாலும், அரசியல் சாசனத்தை தொடக் கூட முடியாது. அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் நான் காப்பேன்.

இண்டியா கூட்டணி அரசு உணவு தானியங்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்கும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும். அக்னிவீரர்கள் திட்டம் மூலம் நாட்டின் ராணுவ வீரர்களை, தொழிலாளர்களாக பிரதமர் மோடி மாற்றிவிட்டார். அவர்களை நாங்கள் மீண்டும் வீரர்களாக மாற்றுவோம். அக்னிவீரர்கள் திட்டத்தை இண்டியா கூட்டணி அரசு ரத்து செய்யப்போகிறது. அனைத்து வீரர்களுக்கும் ஓய்வூதியம், கேன்டீன் வசதிகள் மற்றும் கவுரவம் கிடைக்கும்.

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறது. காவி கட்சிக்கு எதிராக நான் போராடி வருகிறேன். அதனால் என்மீது 24 அவதூறு மற்றும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெலங்கானாவில் பாரத ராஷ்டிரிய சமிதி, பாஜக இடையே கூட்டணி இருந்தது.

காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் போரிட்டு, அவர்களின் முதுகெலும்பை முறித்தது. தற்போது அங்கு மக்கள் அரசு நடந்து கொண்டிருக்கிறது. அதை நாங்கள் ஓடிசாவிலும் அமல்படுத்துவோம். பிஜு ஜனதா தளம்- பாஜக இடையேயான கூட்டணியை வெளியேற்ற நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

x