ஜம்மு: ஹரியாணா மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்திரத்திலிருந்து ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ்கோரி பகுதியை நோக்கி 80க்கு அதிகமானோர் ஒரு பேருந்தில் புனித யாத்திரைக்குப் புறப்பட்டனர். அவர்கள் பயணித்த பேருந்து ஜம்மு மாவட்டத்தில் உள்ள சோக்கி சோரா வளையத்தில் உள்ள தங்கிளி மோர்ஹ் பகுதிக்குள் நுழைந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் பேருந்து தடம்புரண்டு 150 அடி ஆழம் கொண்ட செங்குத்தான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.
சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் போலீஸுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை மீட்புப்படையினர் பள்ளத்தாக்கில் சிக்கியவர்களை மிகுந்த சிரமத்துக்கு இடையில் மீட்க முயன்றனர். ஆனால், விபத்தில் சிக்கியவர்களில் 22 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 57 நபர்களை பத்திரமாக மீட்டு வந்த மீட்புப்படையினர் அவர்களை அக்நூர் மருத்துவமனையிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதித்திருப்பதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.