கடந்த வாரம் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷிவ் சன்னி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் பலரது மனங்களை உலுக்கியது. மருத்துவமனை வளாகத்தில் கிடத்தப்பட்டிருக்கும், சடலத்தின் முகத்தைப் பிடித்துக்கொண்டு கதறி அழும் சிறுவனின் புகைப்படம் அது. அவனது பெயர் கவுரவ். இறந்து கிடந்தவர் அவனது தந்தையும், துப்புரவுத் தொழிலாளியுமான அனில்.
செப்டம்பர் 14-ம் தேதி தலைநகர் டெல்லியில் சாக்கடையில் இருந்த அடைப்பை நீக்குவதற்காக 20 அடி ஆழக் குழியில் இறங்கிய அனில், விஷவாயு தாக்கியதால் மூச்சுத் திணறி இறந்தார். 37 வயதாகும் அனிலுக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். அனிலின் இறப்பைத் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு உதவ நிதி திரட்டும் பிரச்சாரம் ட்விட்டரில் தொடங்கியது. பலரது பங்களிப்புடன் இதுவரை ரூ.48 லட்சத்துக்கு மேலான தொகை சேர்ந்திருக்கிறது.
அனிலின் குடும்பத்தைக் காப்பாற்ற இந்தத் தொகை உதவலாம். ஆனால், அவரைப் போன்ற தொழிலாளிகள் இறப்பைத் தடுக்கமுடியாது. கடந்த பத்து நாட்களில் டெல்லியில் மட்டும் சாக்கடைக் குழியில் இறங்கிய ஆறு தொழிலாளிகள் இறந்திருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்றி உருவாக்கிய சஃபாய் கர்மசாரி தேசிய ஆணையம் என்ற அமைப்பு இந்தத் தகவலைக் கூறுகிறது.
துப்புரவுத் தொழிலாளிகள் கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம் 1993-ல் பிறப்பிக்கப்பட்டது. 2013-ல், சாக்கடைக் குழிகளில் மனிதர்களை இறக்குவதையும் தடை செய்யும் வகையில் இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. நாடெங்கும் உள்ளாட்சி அமைப்புகளும் தனியார் ஒப்பந்ததாரர்களும் துப்புரவுத் தொழிலாளிகளை வைத்துத்தான் சாக்கடை அடைப்புகளை நீக்குகிறார்கள். 2017-ல் மட்டுமே, சாக்கடைக் குழியில் இறங்கி மூச்சுத் திணறி பலியான துப்புரவுத் தொழிலாளிகளின் எண்ணிக்கை சுமார் முந்நூறைத் தொடுகிறது. இந்தத் தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கடந்த டிசம்பரில் மக்களவையில் தெரிவித்தது.