மத்திய அரசுக்கு எதிரான ‘ராவ் தந்திரம்’


தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வழி செய்திருக்கிறார் அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ். 2019 நாடாளுமன்றத் தேர்தலோடுதான் தெலங்கானா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் முயற்சியைத் தடுத்து, தெலங்கானாவுக்கு முன்கூட்டிய தேர்தல் நடத்தும் வகையில் தன் அமைச்சரவையைக் கலைப்பதாக செப்டம்பர் 6-ல் அறிவித்தார் ராவ். இதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் எஸ்.எல்.நரசிம்மன், ராவை தற்காலிகமாக காபந்து முதல்வராக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். நவம்பர் - டிசம்பர் மாதங்களில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் தெலங்கானா தேர்தலும்  நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது ‘தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி’ கட்சியை 100% மதச்சார்பற்ற கட்சி என்று அறிவித்துக்கொள்ளும் சந்திரசேகர ராவ், பாஜக-வுடன் மட்டுமின்றி காங்கிரஸுடனும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். கையோடு 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 105 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் இப்போதே அறிவித்து தேர்தலுக்கும் தயாராகிவிட்டார் சந்திரசேகர ராவ்.

2014-க்குப் பிறகான பல தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸ், மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதற்காக மாநிலக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் ஆரம்பித்திருக்கிறது. கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து பாஜகவை ஆட்சிக் கட்டிலைவிட்டு இறக்கியது. இப்போது, தெலங்கானாவில் சற்று முன்கூட்டியே சுதாரித்து இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, முதன்முறையாக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவர்களோடு கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்திருப்பதை ஒரு நம்பிக்கைக்குரிய முன்னேற்றமாகப் பார்க்கலாம். ஆனாலும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி இந்தக் கூட்டணியில் இணையாதது மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைக்குப் பெரும் பின்னடைவுதான்.

x