கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி இரவு, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பண மதிப்பு நீக்க அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த அறிவிப்பு வெளியானதுமே, ”இந்தியாவில் உள்ள மொத்தக் கருப்புப் பணமும், கள்ளப் பணமும் ஒழிந்துவிடும், ஊழலற்ற இந்தியாவை உருவாக்கப் போகிறார் மோடி என்றெல்லாம் பலரும் தம்பட்டம் அடித்தார்கள்.
இப்படியெல்லாம் சொன்னதால் மக்களும் இதனால் வந்த கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டார்கள். பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவால், நாடெங்கும் சாமானிய மக்கள்வங்கி வாசலிலும், ஏ.டி.எம். வாசலிலும் வரிசை கட்டி நின் றார்கள். வங்கிகளில் தள்ளுமுள்ளு, அடிதடி சம்பவங்கள் நடந்தன. இதில் நூற்றுக்கும் மேலானோர் உயிரையும் விட்டனர். சில வங்கிகள், ஏ.டி.எம்-கள் அடித்து நொறுக்கப்பட்டன.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து புதிய நோட்டுகளாக மாற்றிக்கொள்ள 2017 ஜூலை மாத இறுதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டாலும், அடுத்த சில மாதங்களிலேயே 90 சதவீதத்துக்கும் மேலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பி விட்டன. ஆனாலும் ரிசர்வ் வங்கியானது எவ்வளவு பணம் வங்கிகளுக்கு வந்தது என்ற உண்மை விவரத்தை உடனடியாகச் சொல்லத் தயாராய் இல்லை. பணத்தை எண்ணி முடிக்க அவகாசம் கேட்டுத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது.
இந்நிலையில், பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்து கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில் இப்போது, எவ்வளவு பணம் திரும்பி வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதம் நோட்டுகள் திரும்பிவந்துவிட்டதாம். சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2017-18-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.