சமீபத்தில் நாம் எளிதில் கடந்துவிட்ட ஒரு செய்தி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 70.08 க்கு இறங்கியது என்பதுதான். ஆனால், வரலாறு காணாத இந்தச் சரிவுச் செய்தி நாம் எளிதில் கடந்துவிடக்கூடியது அல்ல. ஏனெனில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு என்பது நேரடியாக சாமானிய மக்களைப் பாதிக்கக் கூடியது.
ஒரு அமெரிக்க டாலரைப் பெறுவதற்கு எவ்வளவு இந்திய ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதைப் பொறுத்தே நம் நாணயத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. டாலருக்கு நிகராகக் கொடுக்கப்படும் இந்திய ரூபாய் அதிகமாகும்போது அது சரிவு என்று குறிப்பிடப்படுகிறது. நாணயத்தின் மதிப்பைப் பாதிக்கும் சில முக்கியக் காரணிகள், உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் சீர்குலைவு, இந்தியாவின் கையிருப்பில் இருக்கும் டாலரின் அளவு குறைவது, ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிப்பது போன்றவை ஆகும்.
தற்போது துருக்கி, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் மீது பொருளாதார, வர்த்தகத் தடைகளை அறிவித்துள்ளது அமெரிக்கா. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறியது உள்ளிட்ட சில நிகழ்வுகள் சர்வதேச சந்தையைப் பதம் பார்த்துள்ளன. உலகப் பொருளாதாரத்தில் சீர்குலைவு ஏற்படும்போதெல்லாம் அமெரிக்க
பெடரல் வங்கி தனது வட்டிவிகிதத்தை உயர்த்தும். அப்போது டாலரின் மதிப்பு உயர ஆரம்பிக்கும்.
இவைதவிர, இந்தியாவில் சமீப ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பொருளாதார, நிதிச் சீர்திருத்தங்களும் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணம். டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை போன்றவற்றால் இந்தியப் பொருளாதாரம் பெரிதும் நம்பியிருந்த முறைசாரா தொழில்துறை பெரும்பாலும் முடங்கிப் போனது. இதைப் பல விதங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வந்த நிலையிலும், மத்திய அரசு தன்னுடைய சீர்திருத்தங்களெல்லாம் வெற்றி பெற்றுவிட்டதாகவே பேசி வருகிறது. ஆனால், தற்போது ரிசர்வ் வங்கியே தொழில் துறை முடங்கிப் போனதை உறுதி செய்துள்ளது. சிறு, குறு நிறுவனங்களின் பாதிப்புக்கு ஜிஎஸ்டி தான் காரணம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டியால் இந்த நிறுவனங்களின் ஏற்றுமதியும் வேலைவாய்ப்புகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. எப்போது நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறதோ அப்போது நாட்டின் டாலர் இருப்பும் குறையத் தொடங்கிவிடும்.