கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளம், 94 ஆண்டுகளில் இல்லாத கனமழையைச் சந்தித்துள்ளது. இந்த மழை வெள்ளத்துக்கு இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு இதுவரை சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது கேரள அரசு. நிவாரண முகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த வியாழன் மாலை வரை 67 பேர் பலியாகியுள்ளனர். ஓணம் கொண்டாட்டத்தில் களித்திருக்க வேண்டிய நேரத்தில் மக்களின் ஓலச் சத்தத்தால் கதிகலங்கிப்போயிருக்கிறது கேரளம். ஆனால், கேரளத்தினர் ஒற்றுமையாய் ஒன்றுகூடி இந்த நெருக்கடியான நிலையைச் சமாளித்து வருவதுதான் ஆச்சரியம்.
இதுபோன்ற ஆச்சரியம் சென்னை பெரு வெள்ளத்தின்போதும் நிகழ்ந்தது என்றாலும் கேரளம் ஒருபடி மேல் என்றே சொல்லலாம். சென்னை வெள்ளத்தின்போது மக்களே வீதியில் இறங்கி உதவிக்கரம் நீட்டியதால்தான் விரைவில் மீண்டு வந்தது சென்னை. அப்போது நாடே சென்னையைத் திரும்பிப் பார்த்தது. ஆனால், அரசியல் கட்சிகள் பெரிய அளவில் சென்னை வெள்ள நிவாரணப் பணிகளைச் செய்யவில்லை என்பதுதான் உண்மை. நிவாரணப் பணிகளுக்காக யாரோ தந்த நிவாரணப் பொருள்களுக்கு அரசியல்வாதிகள் ஸ்டிக்கர் ஒட்டிய அவலங்களைத்தான் பார்த்தோம்.
இயற்கைச் சீற்றங்களின் போது மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சிக்குத்தானே என இங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் போட்டி போடுவார்கள். தப்பித் தவறி நிவாரணப் பணிகளில் கைகோத்தாலும் யார் பெரியவர் என்று போட்டி நடக்கும். ஆளும் தரப்பும் எதிர் தரப்பும் கூட்டணி சேர்ந்து ஒருபோதும் ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ததில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினால் அதிலும் அரசியல் நடக்கும். தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவிலுள்ள பெரும்பாலான இந்திய மாநிலங்களில் இதுதான் நிலை.
ஆனால் கேரளம், இந்த அரசியல் அநாகரிகங்களுக்கு எல்லாம் விதிவிலக்காய் நிற்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் மக்களின் நலன் சார்ந்து ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் எதிர்க்கட்சியான காங்கிரஸும் கைகோத் துள்ளது. வெறுமனே நிதி கொடுப்பது, தனியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களிடம் பேரெடுக்க முயல்வது என்றில்லாமல் அரசுடன் இணைந்தே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ். எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலாவும் முதல்வர் பினராயி விஜயனும் ஒரே விமானத்தில் பயணம் செய்து வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஒன்றாக அமர்ந்து ஆலோசித்துள்ளனர்.