எட்டுவழிச் சாலைக்கும் பத்துவழிச் சாலைக்கும் அரசுகள் மெனக்கெடும் நிலையில், இந்தியாவில் இன்னமும் ஒருவழிச் சாலைக்குக்கூட வழியில்லாத கிராமங்கள் ஏராளம் உள்ளன.
ஆந்திராவின் விஜயநகர் மாவட்டத்தில், பழங்குடியினர் பரவலாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பல கிராமங்களில் போதிய சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதிகள் இல்லை. இதனால், பழங்குடி மக்கள் பல கி.மீ தூரம் கடந்துதான் மருத்துவ சிகிச்சை பெறும் நிலை உள்ளது. கல்வி கற்கவும் பிள்ளைகள் பல கி.மீ நடந்து செல்லும் அவலமும் தொடர்கதையாக இருக்கிறது.
இந்தச் சூழலில், இங்கு வசிக்கும் ஜிந்தம்மா எனும் 8 மாத கர்ப்பிணிக்குக் கடந்த வாரம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக இவரை சுமார் 12 கி.மீ தூரம் வரை இவரது கணவரும், சில கிராமத்தினரும், ஒரு மூங்கில் கூடையில் வைத்து மாறி மாறி தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே ஜிந்தம்மாவுக்குப் பிரசவ வலி அதிகமானதால் அடர்ந்த காட்டுப் பகுதியிலேயே பிரசவம் ஆகிவிட்டது. பிறந்தது ஆண் குழந்தை. ஆனால், அந்தக் குழந்தை இறந்த நிலையில்தான் பிறந்தது. சின்ன உயிர் போனதுக்காக கவலைப்படுவதா அல்லது பெரிய உயிரைக் காக்க மெனக்கெடுவதா என்ற நெருக்கடியான நிலையில், இறந்த குழந்தையையும் ஜிந்தம்மாவையும் மூங்கில் கூடையிலேயே மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு ஜிந்தம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், “உரிய நேரத்துக்குள் ஜிந்தம்மாவை மருத்துவமனைக்கு கொண்டுவந்திருந்தால், குழந்தையையும் காப்பாற்றியிருக்கலாம்” என்று பல சினிமாக்களில் நாம் கேட்டுப் பழகிய பழைய வசனத்தைப் பேசியிருக்கிறார்கள்.
இது கடந்த வாரம் நாம் கடந்து வந்த ஒரு செய்தி. ஆனால், ஒவ்வொரு நாளும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தவண்ணம்தான் இருக்கின்றன. போக்குவரத்து வசதி இல்லாததால் தந்தையைத் தூக்கிச் சென்ற மகன், இறந்த மனைவியைப் பல கி.மீ தூரம் தூக்கிச் சென்ற கணவன் என்று தொடர்ச்சியாகச் செய்திகளைக் கடந்துவந்து கொண்டுதான் இருக்கிறோம்.