மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதைத் தனது இலக்காக வைத்திருக்கும் காங்கிரஸ், அதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலும் வருகிறது. இந்தத் தேர்தல் களில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள திட்டமிட்டுள்ளன.
இதன் தொடக்கமாகவே பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விவகாரம் பேசப்படுகிறது. தீர்மானம் தோல்வியடைந்தாலும் ஒருவிதத்தில் அன்று மக்களவையில் நடந்த விவாதம் காங்கிரஸுக்குச் சாதகமான சூழலையே உருவாக்கியிருக்கிறது. மக்களவையில் ராகுல் காந்தி, பிரதமர் மோடியிடம் பேசிய விதமாகட்டும் அவரைக் கட்டிப்பிடித்த நிகழ்வாகட்டும் நாடு முழுவதும் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அரசியலைப் பற்றி ஒன்றும் தெரியாத ‘பப்பு’ என்று அழைக்கப்பட்ட ராகுலை நாடே கொண்டாடியது. பாஜகவும் ராகுலை முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் எதிரியாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. இது, வரும் தேர்தலுக்கான நல்லதொரு தொடக்கத்தைக் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸின் தலைவராக அவர் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் காரியக் கமிட்டி கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கும் அதிகாரம் ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது. காரியக் கமிட்டி கூட்டத்தில், “பாஜக, ஆர்எஸ்எஸ் பின்புலம் இல்லாத யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகக் காங்கிரஸ் முழுஆதரவு அளிக்கும்” என்று ராகுல் காந்தி கூறியிருப்பதும் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிடுகிறது. ஆனாலும், ராகுல் காந்தியின் முடிவுக்கு மதிப்பளித்து, கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க அக்கட்சி முன்வந்துள்ளது.