ஒழிந்தது கேரளத்தின் நவயுக அடிமைத்தனம்!


கேரளத்தில் எட்டு வருடப் போராட்டத்துக்குப் பிறகு, வேலை செய்யும் பெண்களுக்கு உட்காரும் உரிமை கிடைத்துள்ளது. 

கேரளத்துக் கடைகளில் பெண்கள் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வரையிலும்கூட பணி செய்வது வழக்கம். ஆனால், பணியில் இருக்கும்போது அவர்கள் உட்காரக் கூடாது. முழுநேரமும் நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். சுவற்றிலோ மேசையின் மேலேகூட சாயக் கூடாது. உணவு இடைவேளையும் மிகக்குறைவான நேரம்தான். அடிக்கடி கழிப்பறைக்கும் செல்லக் கூடாது. கடையில் சக ஊழியர்களிடம் பேசக் கூடாது. பொருள்களை எடுத்துச் செல்லக்கூட லிஃப்ட் உபயோகிக்கக் கூடாது.

இதையெல்லாம் கடை உரிமையாளர்கள் சிசிடிவியில் எப்போதும் கண்காணித்தபடி இருப்பார்கள். இதில் ஏதேனும் தவறு நடந்தாலும் சம்பளத்தைக் குறைப்பதும், வேலையை விட்டு நீக்குவதும் நடக்கும். இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு மிகக்குறைந்த ஊதியத்துக்கே கேரளத்துப் பெண்கள் வேலை செய்கிறார்கள்.

அதேநேரம், நாள் முழுக்க நின்றுகொண்டே பணி செய்வதாலும் சரியான நேரத்துக்குக் கழிப்பறை செல்ல முடியாததாலும் சிறுநீரக பாதிப்பு, சிறுநீர் தொற்று பாதிப்பு, வெரிக்கோஸ் வெய்ன்ஸ் போன்ற பல்வேறு சிக்கல்களையும் பெண்கள் சந்தித்து வந்தார்கள்.
ஒருகட்டத்தில் இதையெல்லாம் பொறுக்க முடியாமல் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்கள் கேரளத்துப் பெண்கள். ஆனால், இவர்களின் போராட்டங்களை ஆண் தொழிலாளர்கள் சங்கங்கள்கூட ஆதரிக்கவில்லை. அதனால், பெண் ஊழியர்களே ஒன்றுசேர்ந்து சங்கம் ஒன்றை அமைத்துப் போராட ஆரம்பித்தனர். ‘உட்கார உரிமை வேண்டும்’ என்று அவர்கள் எட்டு ஆண்டுகளாக நடத்திய பெண் விடுதலையின் புரட்சிப் போராட்டத்துக்கு புதிய வெற்றி கிடைத்திருக்கிறது.

x