கொலைத்தளமாக்கும் வலைதள வதந்திகள்!


குழந்தைக் கடத்தல் வதந்திகளை நம்பி அப்பாவிகளைத் தாக்குவதும், அடித்துக் கொல்வதும் இப்போது தேசம் தழுவிய பிரச்சினையாகி வருகிறது.

வாட்ஸ் - அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பி, குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என்ற சந்தேகத்தில் பொதுமக்கள், அப்பாவிகளைத் தாக்கும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்குப் பரவியுள்ளன.

தமிழகத்தில் கடந்த மே மாதம் இது போன்ற ஐந்து சம்பவங்கள் நடந்தது மாநிலத்தை உலுக்கியது. இந்தப் போக்கு இப்போது மற்ற மாநிலங்களிலும் பரவிவருகிறது. கடந்த சில வாரங்களில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், அசாம், திரிபுரா உள்பட பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை நடந்த இதுபோன்ற சம்பவங்களில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே 14 பேராவது இறந்திருக்கக்கூடும் என்றும் தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில், மகாராஷ்டிரத்தில் மட்டுமே ஒரே மாதத்தில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சில இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானவர்களைக் காப்பாற்ற வந்த காவல்துறையினரும் தாக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 1 அன்று மகாராஷ்டிரத்தின் துலே மாவட்டத்தின் ரெயின்பாடா கிராமத்தில் நுழைந்த நாடோடிக் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பொதுமக்களால் இப்படி அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதேநாளில் சென்னை தேனாம்பேட்டையில் வடமாநிலத் தொழிலாளர்கள் இருவர் குழந்தையைக் கடத்த வந்ததாக சந்தேகம் கிளப்பப்பட்டு தாக்கப்பட்டனர். காவல்துறை சரியான நேரத்துக்கு வந்திருக்கவில்லை என்றால், இவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும். இத்தனைக்கும், அந்த இருவரும் அதே தெருவில் வசித்துவந்தவர்கள். இதற்கு அடுத்த நாள் மகாராஷ்டிரத்தின் மாலேகானில் இரண்டு வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் வந்து இவர்களைக் காப்பாற்றினர். இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களைக் காவல்துறையினர் கைது செய்தாலும், பிரச்சினை வெவ்வேறு இடங்களுக்கு நீண்டுகொண்டே போகிறது.

x