சந்தேகம் கிளப்பும் பய்யூஜி மஹராஜ் மரணம்!


ஆர்.ஷபிமுன்னா, சரா

நாடு முழுவதிலும் உள்ள பல அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை சீடராகக் கொண்டவர் பய்யூஜி மஹராஜ். கோடிக்கணக்கான சொத்துகளுக்கும் அதிபதி. இத்தகைய பேரும் புகழும் செல்வமும் படைத்த பய்ஜி கடந்த வாரம், மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தோரில், தனது சூர்யோதய ஆசிரமத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 50.

போலீஸார் கைப்பற்றிய அவரது தற்கொலை கடிதத்தில் “விநாயக் எனது நம்பிக்கைக்கு உரியவர். சொத்து, ஆசிரம நிர்வாகம், நிதிநிலை குறித்த எனது அனைத்து அதிகாரங் களையும் நான் விநாயக்கிற்கு அளிக்கிறேன்” என்று எழுதியிருந்தது. குஜராத் மாநிலத்தின் அகமது நகரைச் சேர்ந்தவர் விநாயக். சுமார் 15 வருடங்களுக்கு முன் பய்யூஜியின் சீடராகி அவரது நம்பிக்கைக்கு உரியவரானார். முதல் மனைவி இறந்த பின் கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் பய்யூஜி. இவரது குடும்ப விவகாரங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார் விநாயக்.

தற்கொலைக் கடிதம் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரமத்தின் பணியாளர்களை போலீஸார் விசாரித்துவருகின்றனர். ஆசிரமத்தின் சிசிடிவி பதிவுகளும் சோதிக்கப்பட்டுள்ளன.

x