ஜார்க்கண்டில் ஆதார் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதால், இதுவரை 10 பேர் உணவில்லாமல் பட்டினியில் உயிரிழந்திருக்கின்றனர் டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா என்றெல்லாம் பிரகடனம் செய்கிறார்கள். ஆனால், பட்டினிச்சாவு இல்லாத இந்தியாவை உருவாக்கத்தான் யாரும் இல்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10 நாட்களில் இரண்டு பேர் பசியால் உயிரிழந்திருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு சாவித்திரி தேவி என்ற மூதாட்டி மூன்று நாட்கள் உணவில்லாமல் பட்டினி கிடந்து இறந்து போனார். அவரது குடும்பத்துக்கு ரேஷன் அட்டை இல்லை. அது ஏன் என்பது தொடர்பான விசாரணைக்கு அரசு உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் மே 25-ல், ரேஷன் பொருட்கள் கிடைப்பது திடீரென்று நின்றுபோனதால், பட்டினி கிடந்து உயிரிழந்திருக்கிறார் மற்றொரு முதியவர் சுதாமா பாண்டே. இவர் மனநலம் குன்றியவர் என்றும் கூறப்படுகிறது.
இவை தவிர, ஆதார் தொடர்பான குளறுபடிகளால் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் சிலர் இறந்த சம்பவங்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு அரங்கேறின. ஆதார் எண் இணைக்கப்படாததால், 11.6 லட்சம் ரேஷன் அட்டைகளை போலியானவை என்று சொல்லி ரத்துசெய்தது ஜார்க்கண்ட் அரசு. அடிப்படைத் தேவைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல முறை சொல்லிவிட்ட பிறகும் இந்த அவலம் தொடர்கிறது.
கடந்த செப்டம்பரில் 11 வயது சந்தோஷிகுமாரி அவரது குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டதால், எட்டு நாள்கள் சாப்பாடு இல்லாமல் இறந்துபோனார். ஆனால், அவர் மலேரியாவுக்குப் பலியானதாகக் கூறியது அரசு.பிறகு, உணவுத்துறை அமைச்சர் சர்யு ராய், இந்த விவகாரத்தில் ஆதார் இணைப்புத் தொடர்பாக தவறு நிகழ்ந்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.