ஊடகங்களின் தீர்ப்பால் விளைந்த பேரிழப்பு


தீர்ப்பெழுதும் வேலையை ஊடகங்கள் செய்ததால், எதிர்காலத்தை இழந்து நிற்கிறார் பத்திரிகையாளர் ஜிக்னா வோரா!

இந்தியாவில் குற்றம் செய்யாதவர்கள் மற்றம் குற்றம் செய்ததற்கான போதிய ஆதாரமின்றி தண்டிக்கப்பட்டவர்களின் கதைகள் ஏராளம். இந்தப் பட்டியலில் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜிக்னா வோராவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்!

2011-ல், பத்திரிகையாளர் ஜே டே, மும்பை தாதா சோட்டா ராஜனால் கொல்லப்பட்டார். இந்தக் கொலையைச் செய்யத் தூண்டியவர் என்று ஜிக்னா வோராவைக் காவல்துறை கைதுசெய்தது. எட்டு மாதம் கழித்து அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால், அதற்குப் பின் அவரை எந்தப் பத்திரிகையும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை. கணவரில்லாமல் தன் மகனை வளர்த்து வந்த வோரா, சிறு தொழில்களைச் செய்து பிழைக்க வேண்டியிருந்தது. இடையே நீதிமன்றத்துக்கும் அலைந்து திரிந்தார்.

ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் மே 2, 2018 அன்று தீர்ப்பு வெளியானது. சோட்டா ராஜன் உள்ளிட்டவர்களைக் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது; கூடவே, ஜிக்னா வோரா நிரபராதி என்றும் தீர்ப்பளித்து விடுதலை செய்தது. கொலை நடந்த சமயத்தில் ராஜனிடம் தொலைபேசி தொடர்பில் இருந்த வோரா, அவரிடம் டேவைப் பற்றி பேசியதை வைத்து வோராதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று காவல்துறை அவரைக் கைது செய்தது. க்ரைம் ரிப்போர்ட்டரான வோரா நிழலுலகினருடன் தொலைபேசித் தொடர்பில் இருப்பது சகஜம். எனவே, அவர் ராஜனிடம் பேசியது டேவின் கொலையில் அவருக்குத் தொடர்பு இருக்கிறது என்பதற்கான ஆதாரமாகாது என்பது அடிப்படை சட்ட அறிவு உள்ளவர்களுக்குத் தெரியாமல் இல்லை. இதைதான் நீதிமன்றமும் சொன்னது.

x