குழந்தைகளைக் காப்பாற்றியதற்கு தண்டனை?


உ.பி. மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் குழந்தைகள் இறந்த வழக்கில், சம்பந்தமின்றி சிறை வைக்கப்பட்ட அரசு மருத்துவருக்குப் பிணை கிடைத்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ளது பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை. 2017 ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி அன்று அங்கு நடந்த சம்பவம் நாட்டையே கொந்தளிக்க வைத்தது. மூளைக் காய்ச்சலுக்கான வார்டில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால், நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

 அன்றைய தினம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கஃபீல் கான், விடுப்பில் இருந்தார். ஆனாலும், தனது செலவில் தனியாரிடம் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிவந்து சில குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றியதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அவர் நாடு முழுவதும் ஒரு ஹீரோவாகக் கொண்டாடப்பட்டார். ஆனால், அடுத்த சில நாட்களில் அவரை வில்லனாக்கியது உபி பாஜக அரசு. கவனக்குறைவால் குழந்தைகள் இறக்கக் காரணமானவர்கள் பட்டியலில் கஃபீல் கானின் பெயரும் சேர்க்கப்பட்டு செப்டம்பர் 20 அன்று கைது செய்யப்பட்டார்.

மேலும் 2013-ல் அவர் அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் சிலிண்டர்களை, தான் நடத்திவந்த தனியார் மருத்துவமனைக்குக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது. ஆனால், ஆதாரமில்லாததால் அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்தது நீதிமன்றம்.

x