2016- நிலவரப்படி நீதிமன்றங்களில் 1,33,000 பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கிறார். கதுவா, உன்னாவ் சம்பவங்களை அடுத்து, இந்தியப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கவும் வலுவான சட்டம் வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கை.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மனீஷ் சிசோதியா ஆகியோர் அவரை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தன்னை அழைத்து இது குறித்துப் பேசும்வரை, போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார் ஸ்வாதி.
அண்மையில் ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. பாலியல் குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிபெற்றுத் தருவதிலும் நம் சட்டமும் அரசும் எவ்வளவு மோசமாகப் பின் தங்கியிருக்கின்றன என்பதை அந்தத் தகவல்கள் சொல்கின்றன. மலிவால் எழுப்பியிருக்கும் கோரிக்கையின் முக்கியத்துவத்தையும், அரசு அதற்கு உடனடியாகச் செவிசாய்க்க வேண்டியதன் அவசியத்தையும் அது உணர்த்துகிறது.