நாக்கு தடுமாறும் தலைவர்கள்!


மார்ச் 29 அன்று, திருவனந்தபுரம்எம்.பி. சசி தரூர், ட்விட்டரில் தவறுதலாக புத்தர் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘மகாவீர் ஜெயந்தி’ வாழ்த்துக்களைத் தெரிவித்து ட்விட்டர் வாசிகளின் கிண்டலுக்கு ஆளானார். இதேபோல், கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘சித்தராமையா’ என்பதற்குப் பதிலாக “எடியூரப்பா அரசுதான் ஊழலில் நம்பர் 1” என்று சொந்த கட்சிக்கே சூனியம் வைத்தார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா. அடுத்து, ஒரு ஊடக சந்திப்பில் ஷாவின் பேச்சை, “நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும் தலித்களுக்கும் எதுவும் செய்யாது” என்று, கன்னடத்தில் தவறாக மொழிப்பெயர்த்தார் உள்ளூர் எம்.பி பிரஹலாத் ஜோஷி. தமிழகத்திலும் மு.க.ஸ்டாலின் பழமொழிகளை தவறாகச் சொன்னதும், ‘எடப்பாடி’ என்பதற்கு பதிலாக ‘வாழப்பாடி’ என்று சொன்னதும் கிண்டலுக்குள்ளானது.

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம்!

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே கர்நாடக தேர்தல் தேதி லீக் ஆனது. இதையடுத்து, பாஜக தகவல்தொடர்புத் துறை தலைவர் அமித் மாலவியாவும் காங்கிரஸ் சமூக ஊடகப் பொறுப்பாளர் கர்நாடகா ஸ்ரீவத்ஸவாவும் ட்விட்டரில் தேதியை முன்கூட்டியே தட்டிவிட்டனர்.

“அதற்கு இரண்டு நிமிடங்கள் முன்பாகவே, ‘டைம்ஸ் நவ்’ ஊடகம் தேர்தல் தேதியைச் சொல்லிவிட்டது” என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி தப்பித்துக்கொண்டார் மாலவியா. இந்தத் தகவல் கசிவு தொடர்பாக ஸ்ரீவத்ஸவாவையும், ‘டைம்ஸ் நவ்’ சேனலையும் மட்டுமே விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். தகவலைக் கசியவிட்டதிலேயே, தேர்தல் ஆணையத்தில் உள்ள ஓட்டைகள் அம்பலமாகிவிட்டன. கூடவே, பாஜகவை விட்டுவிட்டு காங்கிரஸை மட்டும் விசாரிக்கும் தேர்தல் ஆணையத்தின் பாரபட்ச நிலைப்பாடும் எதிர்கட்சிகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

x