தாய்மையை ஏன் மறைக்க வேண்டும்?


கேரளத்தின் பேசுபொருளாகி இருக்கிறது ‘கிரகலெட்சுமி’ என்ற மலையாளப் பத்திரிகையின் அட்டைப் படம். குழந்தைக்கு ஒரு பெண் பாலூட்டுவது போன்ற புகைப்படத்தை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.  ‘தாய்மையை ஏன்மறைக்க வேண்டும்?’ என்பதுதான் (மார்ச் 8) மகளிர் தினத்தை முன்னிட்டு இவர்கள் முன்னெடுத்துள்ள விவாதம்.

இதுதொடர்பாக மூன்று சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டதோடு, பொதுவெளியில் பாலூட்டும்போது ஏற்பட்ட சங்கடங்களையும் தங்கள் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொள்ளுமாறும் தங்கள் வாசகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது அந்த இதழ். “ஃபேஸ்புக்கில் கண்ணூரைச் சேர்ந்த பிஜூ தன்னுடைய குழந்தைக்கு மனைவி பாலூட்டும் படத்தைப் பகிர்ந்திருந்தார். இது சர்ச்சையானது.

படித்தவர்கள் நிறைந்த மாநிலத்தில் ஏன் இவ்வளவு பதற்றம்? மார்பகங்களைப் பாலியலோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்ப்பது கொச்சையானது. ஒரு குழந்தை ஜனித்ததும் அது வாழ்வதற்கான ஜீவிதம் அங்கேதான் தொடங்குகிறது. பெண்கள் இன்று இதுபற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேச முற்படுகிறார்கள். இனியும் அவர்கள் வாயை இந்தச் சமூகம் அடைக்க முடியாது. நாம் எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். விளைவுதான் இந்தச் சிறப்பிதழ்” என்கிறார் ‘கிரகலெட்சுமி’ ஆசிரியர் மோன்சி ஜோசப்.

பெண்களை நாகரிகக் குறைவாக வெளிப்படுத்துவதைத் தடுக்கும் சட்டப்படி, இப்படி ஒரு அட்டைப்படத்தை வெளியிட்டது கிரிமினல் குற்றம் என்று சொல்லி கேரள வழக்கறிஞர் ஒருவர் ‘கிரகலெட்சுமி’க்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பது இதில் அடுத்த திருப்பம்.

x