சென்னை: தமிழ்நாட்டில் 164 அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் இடங்கள் உள்ளன.
இந்நிலையில், 2024-2025-ம்கல்வி ஆண்டில் இந்த இடங்களில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் 2 லட்சத்து 11,000 மாணவ,மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களின் தரவரிசைப் பட்டியல்சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு அரசு கலைக் கல்லூரிகளில் நேற்று தொடங்கியது. இக்கலந்தாய்வு நாளை முடிவடைகிறது.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வை தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜுன் 10 முதல் 15-ம் தேதிவரையும், அதன்பிறகு 2-வது கட்ட கலந்தாய்வு ஜுன் 24 முதல் 29-ம்தேதி வரையும் அந்தந்த கல்லூரிகளில் நடைபெறும். முதலாம் ஆண்டுக்கான வகுப்பு ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.