சென்னை ஐஐடியில் சர்வதேச இசை, கலாச்சார மாநாடு: மே 20 முதல் 26 வரை நடைபெறுகிறது


சென்னை: சென்னை ஐஐடியில் மே 20 முதல் 26-ம் தேதி வரை சர்வதேச அளவிலான இசை, கலாச்சார மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு குறித்து ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, டீன் (மாணவர் நலன்) சத்திய நாராயணா வி.கும்மாடி, ஸ்பிக் மெக்கே அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய ஸ்ரீ கண்ணன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில், சென்னை ஐஐடியும், ஸ்பிக் மெக்கே அமைப்பும் இணைந்து சர்வதேச இசை, கலாச்சார மாநாட்டை நடத்துகின்றன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட இசை, நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு, சென்னை ஐஐடியில் மே 20 முதல் 26-ம் தேதி வரை ஒரு வார காலம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில், இசை, நடனம், நாட்டுப்புறக் கலைகளின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பயிலரங்குகள், இசை, நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடனங்கள், கைவினைக் கலைகள், திரைப்படங்கள் இடம்பெறுகின்றன.

உலகப் புகழ் பெற்ற இந்துஸ்தானி புல்லாங்குழல் கலைஞர் பண்டிக் ஹரி பிரசாத், சரோட் கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலிகான், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கர்நாடக இசைப் பாடகி சுதாரகுநாதன், நாதஸ்வர கலைஞர் சேஷம் பட்டி சிவலிங்கம் உள்ளிட்டோர் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

மேற்கு வங்கம், அசாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் அரிய, பாரம்பரிய நடனங்களும் இடம்பெறுவது மாநாட்டின் சிறப்பு அம்சம் ஆகும். இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா முழுவதும் இருந்தும் 1300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் பதிவு செய்துள்ளனர்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை பொதுமக்களும் இலவசமாக கண்டுகளிக்கலாம். மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சி 20-ம் தேதி மாலை நடைபெறுகிறது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.ஐஐடியில் விரைவில் கலாச்சார ஒதுக்கீடு ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, “சென்னை ஐஐடியில் வழங்கப்படும் படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளோம்.

இதேபோல், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் கலாச்சார இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். இது எனது செயல்திட்டங்களில் ஒன்று. இந்த ஒதுக்கீடு மூலம் இசை, நடனம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பயன்பெறுவர்” என்றார்.

ஐஐடியில் விரைவில் கலாச்சார ஒதுக்கீடு: ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, “சென்னை ஐஐடியில் வழங்கப்படும் படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளோம். இதேபோல், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் கலாச்சார இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். இது எனது செயல்திட்டங்களில் ஒன்று. இந்த ஒதுக்கீடு மூலம் இசை, நடனம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பயன்பெறுவர்” என்றார்.