அகில இந்திய குழந்தைகள் கல்விசார் போட்டி - புதுச்சேரி ஆசிரியர்களுக்குப் பரிசு!


அகில இந்திய குழந்தைகள் கல்விசார் போட்டியில் பரிசுப்பெற்ற ஆசிரியர்கள்

புதுச்சேரி: அகில இந்திய குழந்தைகள் கல்விசார் போட்டியில் புதுச்சேரி ஆசிரியர்கள், ஆசிரியைகள் பத்து பேரின் ஆடியோ, வீடியோ படைப்புகளுக்கு, தலா ரூ. 40 ஆயிரம் பரிசும், கோப்பையும் கிடைத்துள்ளது.மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் அகில இந்திய குழந்தைகள் கல்விசார் போட்டி ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் இந்தியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 650 பேர் கலந்து கொண்டனர். ஆடியோ பிரிவில் 350 பேர் போட்டியிட்டனர். வீடியோ பிரிவில் 250 பேர் போட்டியிட்டனர். இதில் புதுச்சேரியை சேர்ந்த 150 ஆசிரியர்களும் போட்டியிட்டனர்.
இப்போட்டியில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்களின் 10 படைப்புகள் (தனியாகவும், குழுவாகவும் பங்கேற்பு) ஆடியோ மற்றும் வீடியோ பிரிவில் கோப்பை மற்றும் தலா ரூ. 40 ஆயிரம் பரிசு பெற்றுள்ளது.

சிவபிரகாசன், செந்தில், சசிகுமார், கோபிநாத் ஆகியோரின் ஆடியோக்கள் சிறந்த ஆடியோக்களின் பிரிவில் வெற்றி பெற்றுள்ளது. சசிகுமார் சந்திரன், ரேவதி, ராஜ்குமார், வளர்மதி, சபரிநாதன், கார்த்திகேயன், கயல்விழி ஆகியோரின் படைப்புகள் வீடியோ பிரிவில் சிறந்த படைப்புகளாக பரிசுகளை வென்றுள்ளது.

இதையடுத்து, அகில இந்திய குழந்தைகள் கல்விசார் போட்டிக்கான விருதுகள் வழங்கும் விழா ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு மண்டல கல்வி நிறுவனத்தில் நடந்தது. இவ் விழாவில் டில்லி மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணை இயக்குநர் அமரேந்திர பெஹெரா, மேகாலயா வின் வடகிழக்கு மண்டல கல்வி நிறுவனத்தின் முதல்வர் ப்ளோரெட் ஜித்கார் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த ஆடியோ மற்றும் காணொலிகளுக்கு விருதுகளை வழங்கினர்.

x