புதுச்சேரி: இனி அரசுப்பள்ளி மாணவி, மாணவிகள் செயல்பாட்டை அறிய முழுமையான முன்னேற்ற அட்டையை உருவாக்குவது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு புதுச்சேரியில் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் பயிற்சி நடந்தது.
ஒரு மாணவர் பெரும் தேர்ச்சியை ‘பிராக்ரஸ் கார்டு’ என்னும் முன்னேற்ற அட்டை மூலம் பெற்றோர்கள் அறிந்து கொள்வர். ஆனால் புதிய கல்விக் கொள்கையானது மாணவர்களின் முன்னேற்றம் என்பது பாடத்தில் பெறும் மதிப்பெண் மட்டுமன்று அது அவர்களின் அறிவு, தன்னுணர்வு, சமூக உணர்வு, உடலியக்கம் ஆகிய கூறுகளை உள்ளடக்கிய 360 டிகிரி அளவில் கணக்கிடவேண்டியது என்ற நோக்கோடு உருவாக்கப்பட்டது அதற்காவே ‘முழுமையான முன்னேற்ற அட்டை’ முறை உருவாக்கியுள்ளனர்.
மாணவர்களின் பாடம் சார்ந்த மற்றும் இணைப் பாடத்திட்ட செயல்பாடுகளை முழுமையான முறையில் மதிப்பீடு செய்யும் பொருட்டு ‘முழுமையான முன்னேற்ற அட்டை’ முறை உருவாக்கப்பட்டது. இதுபற்றி தலைமையாசிரியர்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாநில பயிற்சி மையமானது இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை லாசுப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன பேரவைக் கூடத்தில் நடந்தது.
புதுடில்லி என்சிஇஆர்டி-யில் பணிபுரியும் பேராசிரியர்கள் முனைவர் பிரீத்தம் பியாரி மற்றும் முனைவர் பீயுஷ் கமல் ஆகியோர் கருத்தாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.பயிற்சியில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளின் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிர்யர்கள் கலந்து கொண்டனர்.வரும் கல்வியாண்டில் இனி பிராக்ரஸ் கார்டுக்கு பதிலாக இப்புதிய அட்டைகள் தரப்படவுள்ளது.