குன்றத்தூர் சோகம்: தாய் தன்னிடம் போனில் பேசாததால் மனமுடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை


குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே பிரிந்து சென்ற தாய் தன்னைப் பார்க்க வராததால் மனமுடைந்த விமான பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஷா வர்மா(24). இவரது தந்தை சிறுவயதில் இறந்துவிட்ட நிலையில், தாய் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு துபாயில் வசித்து வந்தார். அபிஷா வர்மா கடந்த 22-ஆம் ஆண்டு வரை துபாயில் தனது தாயுடன் வசித்து வந்த நிலையில், அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் விமானத்தில் பணிப்பெண் வேலை கிடைத்தது.

இதனால், குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனது தோழிகளுடன் தங்கியிருந்து தினமும் சென்னை விமான நிலையத்தில் வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக அவரது தாய் துபாயில் இருந்து அபிஷாவர்மாவிடம் சரிவர போனில் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அபிஷா வர்மா கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அவரது தாய் அபிஷா வர்மாவிற்கு பல தடவை போன் செய்து பார்த்த போதும், அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் அவரது தோழிகளிடம் கூறி, அவரது அறையில் சென்று பார்க்குமாறு கூறினார். அதன் அடிப்படையில் தோழிகள் அபிஷா வர்மாவின் அறைக்குச் சென்று பார்த்த போது, அங்கு மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் அபிஷாவர்மா இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், இறந்த விமான பணிப்பெண் அபிஷா வர்மாவின் உடலை மீட்டு, அதனை பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x