புதுக்கோட்டை: சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று ஒரே நாளில் 40 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று, தமிழக அரசின் திட்டங்கள், சலுகை களை விளக்கி மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி, துண்டறிக்கை விநியோகம், பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் சலுகைகள் அறிவித்தல் மூலமாகவும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று ஒரே நாளில் மாணவ- மாணவிகள் 40 பேர் புதிதாக சேர்ந்தனர்.
இவர்களை ஆட்சியர் எம்.அருணா வரவேற்றார். மேலும், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பலூன் வழங்கி, கிரீடம் அணிவிக்க ப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, புதுக்கோட்டை போஸ் நகர் அரசு நடுநிலைப் பள்ளி, ராஜகோபாலபுரம் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் நேற்று தலா 5 பேர் புதிதாக சேர்ந்தனர்.