சென்னை: அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களை அதிகளவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தேசிய அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விருது வழங்கும் நிகழ்வு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தவுள்ளது. இதையடுத்து அதுதொடர்பான போட்டிகளில் பங்கேற்க அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின் மாணவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
இதுதவிர அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கிலும், அதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுசார்ந்த கூடுதல் விவரங்களை யுஜிசி வலைதளத்தில் (https://www.ugc.gov.in/) சென்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.