பெரம்பலூர்: லாடபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், பள்ளி கல்வித் துறை சார்பில் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத் தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய வகுப்பறை கட்டிடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் அண்மை யில் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இப்பள்ளியின் முன்னாள் மாணவர் அருள்மணி தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தான் படித்த பள்ளிக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு ரூ.2.15 கோடி மதிப்பில் அழகான வகுப்பறை கட்டிடங்கள், மாணவர்கள் அமர இருக்கைகள், உணவுக் கூடம், குடிநீர் வசதி, கழிப்பறைகள் ஆகியவற்றை நவீன முறையில் கட்டிக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அருள்மணி மற்றும் தனியார் நிறுவன பொது மேலாளரும், ஓய்வு பெற்ற ஆட்சியருமான ஸ்ரீதர் ஆகியோர் பள்ளி கட்டிடங் களைத் திறந்து வைத்தனர்.
இது குறித்து அருள்மணி கூறுகையில்,"படித்த அரசுப் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் எங்களது நிறுவனத்தின் மூலம் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்ட’த்தில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். மேலும், ஓராண்டுக்கான பராமரிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளோம். இதேபோல, மாவட்டத்தில் மற்ற அரசுப் பள்ளிகள் மேம்படுத்த கோரிக்கை விடுத்தால், பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறோம்" என்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.