புதுச்சேரி: மத்திய பல்கலைக் கழக துணை வேந்தராக பேராசிரியர் குர்மீத் சிங், கடந்த 2017ம் ஆண்டு நவ.29ம் தேதி பொறுப்பேற்றார். கடந்த 2022ம் ஆண்டு நவ.23ம் தேதி இவரது பதவிக்காலம் நிறைவடைந்தது. புதிய துணை வேந்தரை நியமிக்க புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் செயற்குழுவில் உள்ள இருவரின் பெயர்களை பரிந்துரைக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியது. இச்சூழலில் குர்மீத் சிங்கின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து, மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.
இக்காலத்தில் மத்திய பல்கலைக் கழகத்தின் தர வரிசை கடுமையாக சரிந்தது. மேலும் பலவித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. இதனால் பணி நீட்டிப்பு தரப்படாமல் கடந்த 2023 நவம்பரில் அவர் பணி ஓய்வு பெற்றார். இதன் பிறகும், அவர் தங்கியிருந்த பங்களாவை காலி செய்யாமல் இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியரும், கல்விப் பிரிவின் இயக்குநருமான தரணிக்கரசு, துணை வேந்தர் பொறுப்பை கவனித்து வந்தார். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பொறுப்பு துணை வேந்தர் பொறுப்பில் பல்கலைக் கழகம் இயங்கியது.
இந்த நிலையில், ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் உயிரித் தொழில் நுட்பம் மற்றும் உயிரித் தகவலியல் துறை முதுநிலை பேராசிரியரான பனித்தி பிரகாஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை, மத்திய அரசின் கல்வித் துறை இயக்குநர் சுபாஷ் சந்த் ஷாரு பிறப்பித்துள்ளதாக பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக் கழக ஆசிரியர் அல்லாத ஊழியர் நலச் சங்கத்தினர் புதிய துணை வேந்தரை நியமிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினர் கருத்து தெரிவித்தனர்.