கிருஷ்ணகிரி: கெரிகேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளிக்கு ”ஐஎஸ்ஓ” தரச்சான்று!


கிருஷ்ணகிரி: தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகளுடன் செயல்பட்டு வரும், கெரிகேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளிக்கு 'ஐஎஸ்ஓ' தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கெரிகேப்பள்ளி, நாடார் தெரு, புதுக்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், கடந்த 1962-ம் ஆண்டு கெரிகேப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு இப்பள்ளியில் 22 மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர்.

பள்ளியின் தலைமையாசிரியர் வீரமணி தலைமையிலான ஆசிரியர்களின் தொடர் முயற்சியால் தற்போது பள்ளியில் 65 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், தனியார் பள்ளிக்கு நிகரான கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கு சீருடைகள், ஸ்மார்ட் வகுப் பறைகள், கணினி ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவையுடன் செயல்படுகிறது. குறிப்பாக, பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், தூய்மையாக பராமரித்தல் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விருதுகள் குவிப்பு: கடந்த 5 ஆண்டுகளில் இப்பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளுக்காக அன்பாசிரியர் விருது, சிறந்த பள்ளி மேலாண்மை குழு பள்ளிக்கான விருது, மாநில எழுத்தறிவு விருது, நற்சிந்தனை நன்னடை பள்ளிக்கான விருது, பசுமை முதன்மையாளன் கிரீன் சாம்பியன் விருது, மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப் பள்ளிக்கான கல்வி வள்ளல் காமராசர் விருது உள்ளிட்டவையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், இப்பள்ளியை ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்கும் தனியார் நிறுவனம், தற்போது 'ஐஎஸ்ஓ' 9001:2015 தரச்சான்றிதழை வழங்கி மேலும், பெருமை சேர்த்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ் உட்பட கல்வித்துறை அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கூடுதல் பணியிடம்: இது குறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க ஆசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய நாட்காட்டி, தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேனர்களை வைக்கின்றனர்.

தற்போது ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது பெருமையாக இருந்தாலும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும். இதேபோல், ஏற்கெனவே பள்ளியில் இருந்த பழுதான 2 கட்டிடங்கள் அகற்றப்பட்ட நிலையில், புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை. இதுபோன்ற குறைகளை களைந்தால், எதிர்வரும் கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றனர்.

x