தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக க.ந.செல்வக்குமார், கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், ஓராண்டு பணி காலம் நீட்டிக்கப்பட்டது. அவரது நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில், பல்கலைக்கழக வேந்தரின் பிரதிநிதியாக தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக கழகத்தின் துணைவேந்தரும், பல்லைக்கழக மானியக்குழு (யுஜிசி) உறுப்பினருமான சசிகலா வஞ்சாரி, அரசு பிரதிநிதியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிசிச்சையியல் இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குனர் தனபாலன், பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக பேராசிரியர் ராபின்சன் ஜெ.ஜெ.ஆபிரகாம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தேடுதல் குழு அமைப்பதற்கான அரசாணை, தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. குழுவின் ஒருங்கிணைப்பாளராக, சசிகலா வஞ்சாரி செயல்படுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த தேடுதல் குழு, தகுதியான 3 பேரை தேர்வு செய்யவுள்ளது. இதில், ஒருவரை துணைவேந்தராக, ஆளுநர் தேர்ந்தெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

x