யுஜிசி வரைவு அறிக்கையை முற்றிலும் நிராகரிக்கிறோம். அதை அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தி யுஜிசி தலைவருக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) தலைவருக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஐ.அருள் அறம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக்கு யுஜிசி வரைவு அறிக்கை பெரும் தடையாக இருக்கும் என்று கருதுகிறோம். ஆசிரியர்களை 6 மாத ஒப்பந்தத்தில் நியமித்து, அதன்பிறகு ஒப்பந்தத்தை தொடர்ந்து புதுப்பிப்பது, ஆசிரியர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும். ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 சதவீத ஆசிரியர்கள் மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். யுஜிசி வரைவு அறிக்கை அமலுக்கு வந்தால் இந்த ஒப்பந்த முறை பணிநியமனத்துக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்குவதுபோல ஆகிவிடும். இதனால், பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த தரமும் பாதிக்கப்படும்.
மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளால் நிறுவப்பட்டு மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இயங்கி வருபவை. இந்த சூழலில், துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழு உறுப்பினர்களை நியமிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலும் பறிப்பதாக வரைவு அறிக்கை உள்ளது. பல்கலைக்கழக சுயாட்சியை சிறுமைப்படுத்துகிறது. மாநில அரசால் இயற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டத்தின்படி இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்தை குறைத்து மதிப்பிடுவது ஜனநாயக விரோதம். யுஜிசி விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்பது சுதந்திரத்துக்கு இழைக்கப்பட்ட பெரிய மிரட்டல் ஆகும்.
அரசியலமைப்பு சட்டப்படி, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். கல்வி என்பது பொது பட்டியலில் உள்ளது. இந்த நிலையில், கல்விக் குழு, கல்வி வாரியம் போன்ற அமைப்புகளிடம் கலந்து பேசாமல் எடுக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை காரணம் காட்டி, ஒரு மாநில பல்கலைக்கழகத்தை அடிபணிய வைக்க முடியாது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் குறிப்பிட்ட நோக்கத்துக்காக தொடங்கப்பட்டது. ஒவ்வொன்றின் தொலைநோக்கு பார்வை, திட்டம் வெவ்வேறாக இருக்கும். அப்படியிருக்க, நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் பொதுவான ஒரு வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். பல்கலைக்கழகங்களின் சுதந்திரமான செயல்பாடுகளை முடக்கும். எனவே, யுஜிசி வரைவு அறிக்கையை முற்றிலும் நிராகரிக்கிறோம். அதை அமல்படுத்த கூடாது.
உண்மையில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த விரும்பினால், பல்கலைக்கழகங்களுக்கு தேவையான நிதி வழங்க வேண்டிய தனது முக்கியமான பணியை யுஜிசி செய்ய வேண்டும். இதன்மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க முடியும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.