சென்னை: ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 22,931-வது ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆய்வுசெய்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்றைய தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரிவாக்கவும் தமிழக அரசால் முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்க திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) அமைக்கப்பட்டு வருகின்றன. ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் இதுவரை 22,930 ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் நிறுவப்பட்டு மாநிலம் முழுவதும் 11 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இத்திட்டத்தின் இறுதிக்கட்டமாக சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22,931-வது ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (எஸ்எஸ்ஏ) மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும், ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அரசு பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் மற்றும் உயர்தொழில்நுட்ப ஆய்வக திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் 43 லட்சத்து 89 ஆயிரத்து 382 மாணவர்கள் பயனடைவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் பெருமிதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘மாநிலம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன். அந்தப் பணி, திங்கள்கிழமை (நேற்று) சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார். நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் மாதிரி பள்ளிகள் என பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன். அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்