சென்னை: இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சி மையத்தை ஐஐடி தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை அருகேயுள்ள தையூரில் அமைந்துள்ள ‘டிஸ்கவரி’ செயற்கைக்கோள் வளாகத்தில் ஆழமற்ற கடல்அலை படுகைஆராய்ச்சி மையத்தை ஐஐடி அமைத்துள்ளது. இது, ஆசியாவி லேயே மிகப்பெரிய ஆராய்ச்சி மையம் ஆகும். இங்கு, துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடல்சார் பொறியியல் போன்றவற்றில் உள்ள சவாலான பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுவதற்கான சிறப்பு வசதிகள் உள்ளன.
மேலும் துறைமுகங்கள், இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பங்களையும் இது வழங்கும். துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடலோர பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மையம், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாகச் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஐடி பெருங்கடல் பொறியியல் துறை பேராசிரியர் முரளி கூறும்போது, ‘‘இந்த ஆராய்ச்சி மையத்தின் வாயிலாக சென்னை ஐஐடி சர்வதேச அளவில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மாறும்.
இதன்மூலம், ஆராய்ச்சி- தொழில் பயன்பாடுகளுக்கான ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆய்வகத்தில் அலைகளை உருவாக்க பிறநாடுகளின் தொழில்நுட்பத்தை நாம் சார்ந்திருக்க தேவையில்லை”என்றார். பேராசிரியர் வி.ராம் கூறும்போது, “இந்திய துறைமுகங்கள்,கடல்சார் பொறியியல், உள்நாட்டு நீர்வழித் திட்டங்கள் என மத்திய அரசின் எதிர்கால முன்முயற்சிகளை கருத்தில் கொண்டு ஆராய்ச்சிக் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.