சென்னை: அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில் 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டன. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 9 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது.
கனமழை காரணமாக கடலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் தேர்வுகள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் 24-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை மாணவர்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். சில பள்ளிகளில் புதிதாக பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. முதல் நாளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
சென்னை எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மாணவிகளுக்கான பாடநூல்களை வழங்கினார். இதற்கிடையே, கனமழை பாதிப்புக்குள்ளான கடலூர் உட்பட 3 மாவட்டங்களில் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் மாவட்ட அளவில் நேற்று தொடங்கின. இந்த தேர்வு ஜனவரி 10-ம் தேதி வரை தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள், சீருடைகள் போன்ற நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.