மாணவர்களின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது: பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு


தமிழகத்தில் அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கான 'போஷ்' அமைப்பு கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும் என உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து தமிழக உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, உயர்கல்வி நிறுவனங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித் துறை செயலர் கோபால் தலைமையில் இணையவழியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப கல்வித் துறை ஆணையர் டி.ஆபிரகாம், மாநில பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- அனைத்து மாநில பல்கலைக்கழகங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதை ஏற்க முடியாது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை 3-ம் தரப்பு தணிக்கை செய்யவும் ஏற்பாடு செய்யவேண்டும். வெளிநபர்கள் மற்றும் வளாகத்துக்குள் உள்ளிருப்பவர்களால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால் அவர்களை முழுமையாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தவிர்க்க வேண்டும்.

இதுதவிர அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உட்புற புகார்க் குழு மற்றும் உதவி மையம் அமைக்க வேண்டும். குறிப்பாக பணிச்சூழலில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்காக அமைக்கப்படக்கூடிய 'போஷ்' அமைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். புகார்கள் எழும்பும் போது அதன்மீது கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புகார் எழுப்புபவர்களின் ரகசியமும் காக்கப்பட வேண்டும். மாணவர்களின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது. மாணவர்களின் கருத்தையும் கேட்டு பெற வேண்டும்.

அதேபோல், கல்வி நிறுவனங்களுக்கு வந்துசெல்லும் வெளிநபர்கள் விவரங்கள், வாகனங்கள் எண்ணிக்கையை தினமும் ஆவணம் செய்யவேண்டும். எலக்ட்ரீசியன்கள், கேன்டீன் தொழிலாளர்கள், ஒப்பந்தம் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உட்பட வெளியாட்களை பயோமெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு அவர்கள் வருகையை பராமரிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவுவாயில்களை தவிர்க்க வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு அடையாள அட்டை அவசியமாகும். போதைப்பொருள் தடுப்புக்குழு போன்ற முக்கிய குழுக்கள் வளாகத்தில் திறம்பட செயலாற்ற வேண்டும்.

மாணவர்கள், பணியாளர்கள் தவிர்த்து முன் அனுமதியின்றி வேறு யாரும் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக சந்தேகத்துக்குரிய நபர்களை தடுக்க வேண்டும். கல்வி நிறுவன வளாகத்துக்குள் ரோந்து பணி முறையான இடைவெளியில் இருக்க வேண்டும். அதுசார்ந்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். வளாகத்துக்குள் பாதுகாப்பற்ற இடமாக அடையாளம் காணப்படும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, அங்கு மின் விளக்குகள் முறையாக பராமரிக்க வேண்டும்.

முக்கியமாக மாணவ, மாணவிகளை காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யச் சொல்லி, தேவைப்படும்போது பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். ஆலோசனை, புகார் பெட்டிகள் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் முக்கிய இடங்களில் வைக்கப்பட வேண்டும். இவற்றை முறையாக பின்பற்றாத உயர்கல்வி நிறுவன அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

x