மதுரை காமராஜர் பல்கலைக்கழக பிஎச்டி மாணவர் சேர்க்கையில் முறைகேடு: விசாரிக்க குழு அமைப்பு


கோப்புப்படம்

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவர் சேர்க்கையில் பணம் வாங்கிக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கிய முறைகேடு குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சி படிப்புக்கான (பிஎச்டி) நுழைவுத் தேர்வு கடந்த செப். 22-ல் நடைபெற்றது. இதில் 1094 மாணவ, மாணவிகள் பங்கேற்றேனர். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற 50 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால் 18 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனால் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாணவர்களுக்கு என்எப்எம் (நார்மலைஷேசன் பார்முலா மெத்தேடு) முறையில் கூடுதல் மதிப்பெண் வழங்க முடிவானது.

இந்நிலையில், ஆராய்ச்சி பிரிவு கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாணவ, மாணவிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு என்எப்எம் முறையில் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கியது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பேராசிரியர்கள், மாணவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு நவம்பர் மாத இறுதியில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் விசாரணை குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழக பதிவாளருக்கு உயர் கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவையடுத்து பிஎச்டி மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து விசாரிக்க பல்கலைக்கழக பயோடெக்னாலஜி துறைத் தலைவர் டாக்டர் டி.கணேஷ் தலைமையில் பேராாசிரியர் எம்.சிவகுமார், உதவி பேராசிரியர்கள் பி.வரலெட்சுமி, ஏ.சிவா, எஸ்.ரோசிதா ஆகியோர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அமைத்து பெறுப்பு பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

6 குற்றச்சாட்டுகள் குறுித்து பொறுப்பு பதிவாளர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இக்குழு விரைவில் கூடி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என பதிவாளர் உத்தரவில் கூறியுள்ளார்.

x