சென்னை: குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதனையடுத்து முதன்மை தேர்வுகள் பிப்ரவரி 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் முதன்மை தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதன்படி, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு இரண்டாம் தாள் பிப்ரவரி 8ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முதல் தாளாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாள், பிப்ரவரி 23ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வுகள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. அதேபோல குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாள் தேர்வு முறையிலும் மாற்றங்கள் நடைபெற உள்ளன. ஓஎம்ஆர் முறையில் (Optical Mark Recognition), இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
குரூப் 2 பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்காக 21,822 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர்.