சென்னை: மாநில தொழில்நுட்ப கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சுருக்கெழுத்து அதிவேக (ஹை ஸ்பீடு) தேர்வு பிப்ரவரி 15, 16-ம் தேதிகளிலும், சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 22, 23-ம் தேதிகளிலும், கணக்கியல் இளநிலை, முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 24-ம் தேதியும், தட்டச்சு இளநிலை, முதுநிலை அதிவேக தேர்வுகள் மார்ச் 1, 2-ம் தேதிகளிலும் நடைபெற உள்ளன.
இந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு டிசம்பர் 16-ம் தேதி (நேற்று) தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 17-ம் தேதி ஆகும். அதன்பிறகு ஜனவரி 19-ம் தேதி வரை அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் ஜனவரி 19 முதல் 21-ம் தேதிக்குள் திருத்தம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.