திருச்சூர்: உடலில் உடற்கூறுகளை எடுத்துரைக்கும் ஓவியப்போட்டி இன்று கேரளாவின் சிறுதுர்த்தியில் நடைபெற்றது. இது, கேரளாவின் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்றது.
கேரளா மாநிலத்தில் 18 ஆயுர்வேதக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 3 அரசு கல்லூரிகள், 2 அரசு நிதி உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் 13 தனியார் கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ஒன்றாக இருப்பது திருச்சூர் மாவட்டத்தின் சிறுதுர்த்தியிலுள்ள பிஎன்என்எம் நினைவு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும். அறக்கட்டளையால் நடத்தப்படும் இக்கல்லூரியின் சார்பில் 'ஆலேக்யா 2024' எனும் பெயரில் உடற்கூறு ஓவியப்போட்டி நடைபெற்றது.
இதன் போட்டியாளர்களாக கேரளாவின் 14 ஆயிர்வேத மருத்துவக் கல்லூரிகள் கலந்து கொண்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஓவியப் போட்டியானது தேசிய அளவிலான ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த வருடம் பெரும்பாலானக் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் புதுச்சேரியின் மாஹியிலுள்ள ராஜீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதன் போட்டியாளர்கள் தம் முகம், தொண்டை, கை, முதுகு உள்ளிட்ட பல குறிப்பிட்ட உடல் பாகங்களின் உள்ளே இருக்கும் உடற்கூறுகளை வெளியில் ஓவியமாக்கிக் காட்டினர். இவற்றை பல்வேறு வர்ணங்களால் தீட்டி படக்காட்சிகளை போல் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி இருந்தனர். இப்போட்டியில் ஓளூரின் வைத்தியரத்னம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் மாணவ, மாணவிகள் குழுக்களான ஆகீலா.எம்.எஸ், கிருஷ்ணஜா எஸ்.ஆர் முதல் பரிசு பெற்றனர். இரண்டாவது பரிசினை திருச்சூரின் பிஎன்என்எம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி குழுவின் அனகா டி.சஞ்சீவ், மஞ்சு பிரசாத் பெற்றனர்.
மூன்றாவது பரிசு, பாலகாட்டின் சந்த்திகிரி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக் குழுவின் கார்த்திகா பிரதீபன், சோனாலி வியாஸுக்கு வழங்கப்பட்டது. இப்பரிசுகளை விழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்ட உத்தரப்பிரதேசம் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் பேராசிரியர்(ஓய்வு) எஸ்.சாந்தினிபீ, அளித்தார்.
பரிசுகளை வழங்கியபின் முக்கிய விருந்தினரான பேராசிரியர்.எஸ்.சாந்தினிபீ பேசுகையில், ''இந்த பிஎன்என்எம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு நான் மூட்டுவலி சிகிச்சைக்காக அலிகரிலிருந்து வந்தேன். 14 நாட்களில் நான் குணம் அடைந்து இந்த மேடைக்கு நடந்துவந்து சிரமம் இன்றி ஏறி ஆயுர்வேதத்தின் அற்புதத்தை புரிந்து கொண்டேன்.'' எனத் தெரிவித்தார்.
தம் உடலின் உடற்கூறுகள் ஓவியமாகத் தீட்டிக் காட்டும் இந்தவகை போட்டி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போட்டியை 2 வருடங்களுக்கு முன் பிஎன்என்எம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதன்முறையாக அறிமுகப்படுத்தி இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தவகை ஓவியப்போட்டியை தற்போது கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளும் நடத்தத் துவங்கி உள்ளன. கலை ஆர்வம் கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவ, மாணவிகள் இதில் ஆர்வமுடன் குழுக்களாகக் கலந்து கொள்கின்றனர்.
ஆலேக்யா 2024 விழாவில் பிஎன்என்எம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் இயக்குநரான சந்தியா மன்னத் மற்றும் முதல்வரான பேராசிரியர் டாக்டர்.ஜிஜி மாத்யூ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இதே கல்லூரியின் இணைப்பேராசிரியர் சாந்தினி வரவேற்புரை, உதவி பேராசிரியரான டாக்டர்.மனு கிருஷ்ணன்.கே நன்றியுரை ஆற்றினர். பிஎன்என்எம் கல்லூரியானது மத்திய அரசின் என்ஏபிஎச் அங்கீரம் பெற்ற பட்ட மேற்படிப்பு கல்வி நிறுவனம் ஆகும்.