திருவண்ணாமலை: தீபத்திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை!


திருவண்ணாமலை: தீபத் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 156 பள்ளிகளுக்கு மட்டும் நாளை முதல் வரும் 16 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு நாளை (டிசம்பர் 8 ) முதல் டிசம்பர் 16 வரை என 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் அதன் அருகில் உள்ள 156 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13-ம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது. அன்று மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் காணலாம். கார்த்திகை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் வரும் 17-ம் தேதி நிறைவு பெறுகிறது.

x