நாகர்கோவில்: மாநில விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களை விமானத்தில் இலவசமாக அழைத்து செல்வதாக உடற்கல்வி ஆசிரியர் வாக்குறுதி அளித்தார். இந்த சவாலை ஏற்ற ஏழை அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் காட்வின். இவர் அலங்காநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தபோது ஏழை மாணவ, மாணவிகளை விளையாட்டில் சாதிக்க வேண்டும் என ஊக்குவிப்பதற்காக வெற்றி பெற்றால் விமானத்தில் சொந்த செலவில் அழைத்து செல்வதாக அவ்வப்போது கூறி வந்துள்ளார். இதில் சில மாணவ, மாணவிகள் கடின பயிற்சி செய்து மாநில அளவில் தேர்வானார்கள்.
இதைதொடர்ந்து 2019ம் ஆண்டு 3 மாணவர்களையும், 2020ல் நான்கு மாணவ, மாணவியர்களையும் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து சென்றுள்ளார். இதனால் உற்சாக மிகுதியில் மகிழ்ந்த மாணவ மாணவியர்கள் விளையாட்டு துறையில் தொடர்ந்து சாதித்து வந்துள்ளனர்.
தற்போது உடற்கல்வி ஆசிரியர் காட்வின், குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வருகிறார். இங்கும் விளையாட்டில் சாதிக்கும் ஏழை மாணவ, மாணவிகளை முதல் விமான பயணத்தை தனது சொந்த செலவில் அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
சமீபத்தில் குமரி மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துச் சண்டை, நீச்சல், டேக் வாண்டோ, ஸ்குவாஷ், ஆகிய போட்டிகளில் முதல்முறையாக கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று அடுத்த மாதம் ஜனவரி இரண்டாம் வாரத்தில் மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் இப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொள்கிறார்கள்.
நீச்சல் போட்டியில் 17 வயது பிரிவில் சலோமியா, தனுஷா, கவுசிகா, அபிநயா, சரண்யா, ஜெய்வன், குத்துச் சண்டை போட்டியில் 19 வயது பிரிவில் ராகினி, சவுமியா, டேக் வாண்டோ போட்டியில் 14 வயது பிரிவில் சஞ்சனா ஆகியோர் மாநில போட்டியில் கலந்துகொள்கிறார்கள்.
இதையொட்டி மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் பெர்லா ஜெயந்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது உடற்கல்வி ஆசிரியர் காட்வின் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவிகளை சென்னைவரை விமானத்தில் தனது சொந்த செலவில் அழைத்து செல்வதாக கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; "விளையாட்டு மட்டுமின்றி எந்த துறையில் சாதிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு தங்களால் ஆசைப்பட்டு இதுவரை அடைய முடியாத ஒரு பயணம் என்பது எதிர்பாராமல் கிடைத்தால் அதை, அவர்களால் வாழ்வில் மறக்க முடியாது. அதைப்போல் அவர்கள் அப்போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. இதனால் தான் எனது சம்பளத்தில் சிறிய தொகையை நான் இதுபோன்ற செயலுக்கு சேர்த்து வருகிறேன்.
முதல் விமான பயணத்தில் மாணவ, மாணவியர்கள் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாது. அதைப்போல் எனக்கும் இதில் கிடைக்கும் மனதிருப்தி ஓர் ஆசிரியராய் மட்டுமின்றி, தனி மனிதனாகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது" என்று ஆசிரியர் காட்வின் கூறினார். ஆசிரியர் காட்வினின் சாவாலை ஏற்று, மாநில போட்டியில் வென்று விமானத்தில் பறப்போம் என மாணவ, மாணவியர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.